சென்னை விமான நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்திய 4 தேன் கூடுகள் அகற்றம்
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்திய 4 தேன் கூடுகள் அகற்றப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள 2 நுழைவு வாயில் பகுதிக்கு மேல் பகுதியில் கடந்த சில நாட்களாக தேனீக்கள் 4 இடங்களில் கூடு கட்டி இருந்தன. கொரோனா ஊரடங்கால் தேனீக்களும் வெளியே சுற்றாமல் கூடுகளுக்குள் அடங்கியிருந்தன.
அவ்வப்போது வெளியே பறந்து வரும் தேனீக்கள், அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகளையும், விமான நிலையம் வரும் பயணிகளையும் பதம்பாா்த்து வந்தன. தேனீக்களால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலா் விமான நிலைய இயக்குனருக்கு ஆன்லைனில் புகாா் தெரிவித்தனர்.
இதையடுத்து விமான நிலைய உயா் அதிகாரிகள் நேரடியாக வந்து தேன் கூடுகளை ஆய்வு செய்தனா். இதையடுத்து தேன் கூடுகளை அகற்றி தேனீக்களை விரட்டும் பணியை விமான நிலைய தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனா்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்து ஒரு மணி நேரம் தேனீக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். பயணிகளை அச்சுறுத்தி வந்த 4 தேன் கூடுகளையும் தண்ணீரை பீய்ச்சு அடித்து அகற்றினார்கள். தேன் கூடுகள் தரையில் விழுந்ததும் தேனீக்கள் ஆவேசமாக பறந்தன.
அந்த நேரத்தில் டெல்லி, பெங்களூரு விமானங்களில் செல்ல வந்த பயணிகள் பாதுகாப்பாக மாற்று வழிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள தரைப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தீயணைப்பு படையினரும், விமான நிலைய ஊழியா்களும் தண்ணீா் ஊற்றி சுத்தப்படுத்தினா். ஒரு மணி நேரத்தில் தேனீக்கள் முழுமையாக கலைந்துவிட்டன. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story