திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனையை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தியால்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு வீடு தேடி நடமாடும் வாகனங்கள் வாயிலாக மளிகை பொருட்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு நடமாடும் வாகனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதை தொடங்கி வைத்து அங்கு இருந்த பெண்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வெளியே வராமல் தடுக்கும் வண்ணம், பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காத்திடவும் வீடு தேடி நடமாடும் வாகனங்கள் மூலம் பால், மருத்துவ வசதி, காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடு தேடி கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நடமாடும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு சென்று விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் தொகுப்புகள் ரூ.100 மற்றும் ரூ.150 என இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகிறது.
மளிகை பொருட்களை பொறுத்தவரை ரூ.400-க்கு துவரம் பருப்பு, உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், எண்ணெய், மிளகு, கடுகு, சீரகம் உள்ளிட்ட 12 பொருட்கள் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 1,195 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையும், 384 நடமாடும் வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 1579 நடமாடும் வாகனங்களில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக காய்கறி பொருட்களின் விற்பனை ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்திற்கும், மளிகை பொருட்களின் விற்பனை ரூ.10 லட்சம் முதல் 15 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நடமாடும் வாகனங்களில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்பவர்கள். அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து அனைவரும் கைகளில் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து விற்பனையில் ஈடுபட வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தாமஸ் என்ற ராஜ்குமார், துப்புரவு ஆய்வாளர்கள ்ராமு, சுதாகர், ரமேஷ், வெயில்முத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி நகராட்சி சார்பில் 20 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. 30 நாட்களுக்கான தொகுப்பு ரூ.750 மற்றும் 15 நாட்களுக்கான தொகுப்பு ரூ.350 மதிப்பு கொண்ட காய்கறி மற்றும் மளிகை தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story