மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இ-பதிவு இல்லாமல் சென்ற 50 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் - ஆர்.டி.ஓ. நடவடிக்கை
ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இ-பதிவு இல்லாமல் சென்ற கார், லாரி, வேன் உள்ளிட்ட 50 வாகனங்களை மடக்கி பிடித்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. நடவடிக்கை மேற்கொண்டார்.
மாமல்லபுரம்,
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. திருமணம், காது குத்தல், நிச்சயதார்த்தம் மற்றும் துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் இ-பாஸ் பெற்று வாகனங்களில் செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு விதிமுறைகள் வகுத்து அறிவித்து இருந்தது. இ-பதிவு இல்லாமல் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதற்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக இ-பதிவு இல்லாமல் பொய்யான காரணங்களை கூறி ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் ஏராளமான வாகனங்கள் பயணிப்பதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல்கள் வந்தன.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு ஆர்.டிஓ. சுரேஷ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ், மண்டல துணை தாசில்தார் மணிவண்ணன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் வருவாய்துறையினர், போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி சந்திப்பில் புதுச்சேரி மற்றும் சென்னை நோக்கி சென்ற கார், வேன், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது இ-பதிவு இல்லாமல் பொய்யான காரணங்களை கூறி செல்ல முயன்ற லாரி, கார், வேன் உள்ளிட்ட 50 வாகனங்களை மடக்கி பிடித்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் இ-பதிவு இல்லாமல் வந்த லாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், வேன், கார்களுக்கு தலா ரூ.1,000 என அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.
அபராதம் செலுத்திய பிறகு 50 வாகனங்களும் விடுவிக்கப்பட்டது. அடுத்த முறை பயணிக்கும்போது இ-பதிவு இல்லாமல் வந்தால் அபராதம் விதிப்பதுடன் வாகங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று அந்த வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story