மும்பையில் வாகன நிறுத்தம் ஆணையம் அமைக்க மாநகராட்சி ஒப்புதல்
மும்பையில் வாகன நிறுத்தம் ஆணையம் அமைக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது.
வாகன நிறுத்த ஆணையம்
மும்பையில் வாகனப்பெருக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக வாகனங்களை நிறுத்துவதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. போதிய அளவு வாகன நிறுத்தங்கள் இல்லாததால் முக்கிய மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்தநிலையில் மும்பை வாகன நிறுத்தம் பிரச்சினையை சமாளிக்க மாநகராட்சி ‘மும்பை வாகன நிறுத்த ஆணையத்தை’ அமைக்க உள்ளது. இந்த ஆணையம் அமைக்க மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் வாகன நிறுத்தம் பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. இதை தீர்க்க, போதிய அளவு வசதியான, பாதுகாப்பான, நியாயமான கட்டணத்தில் பொது இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும். எனவே வாகன நிறுத்தம் ஆணையத்தை அமைக்க நிலைக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
வாகன நிறுத்த கமிஷனர்இந்த ஆணையம் அமைப்பதற்கான பணியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமநாத் ஜா ஆலோசகராக செயல்படுவார். டாடா நிறுவனம் அந்தந்த துறைகளை சேர்ந்த வல்லுநர்களை நியமிக்கும். மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வாகனநிறுத்த கமிஷனராக இருப்பார் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இந்த ஆணையம் வாகன நிறுத்தம் கட்டண நிர்ணயம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாகன நிறுத்தத்தை மேலாண்மை செய்வது, வாகன நிறுத்தங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.