ஒடுகத்தூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற போலீசாரை தாக்கிய கும்பல்
ஒடுகத்தூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற போலீசாரை சாராய கும்பல் தாக்கியது. இதில் 3 போலீசார் காயமடைந்தனர்.
அணைக்கட்டு
சாராய வேட்டை
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலையடிவார பகுதிகளில் பாக்கெட் சாராயம் மற்றும் சாராயம் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மதுவிலக்கு போலீசார் மூன்று பேர் ஓங்கப்பாடி மலையடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதியில் சாதாரண உடை அணிந்து சாராய கும்பலை பிடிக்க சென்றனர்.
அப்போது அங்கு சிலர் சாராய பாக்கெட்டுகளுடன் வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அந்த கும்பலை துரத்திச் சென்றனர் இதனால் அவர்கள் கையில் இருந்த சாராயம் மற்றும் கத்தியை வீசி விட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்றதில் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
போலீசார் மீது தாக்குதல்
அவரை பிடித்து போலீசார் தாக்கினர். இருப்பினும் அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி சாராய கும்பலிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து சாராய கும்பலைச் சேர்ந்த சிலர் ஒன்றாக சேர்ந்து போலீசாரை மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒருவருக்கு முகத்தில் ரத்த காயமும் மற்ற 2 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
உடனே அவர்கள் சாராய கும்பலை சேர்ந்த ஒருவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் போலீசாரிடம் சென்று சமரசம் பேசி அந்த நபரை விடுவித்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story