2-வது நாள் சோதனையில் சிக்கிய 500 மதுபாட்டில்கள்


2-வது நாள் சோதனையில் சிக்கிய 500 மதுபாட்டில்கள்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:13 PM IST (Updated: 1 Jun 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், திண்டுக்கல் ரெயில்வே போலீசார் நேற்று 2-வது நாளாக நடத்திய சோதனையில் 500 மதுபாட்டில்கள் சிக்கின. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

மைசூர் ரெயிலில் மது

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை நடக்கிறது. 

எனவே, அதை பயன்படுத்தி கொண்டு சிலர் கர்நாடகாவில் இருந்து மதுவை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
எனவே, கர்நாடகாவில் இருந்து வரும் ரெயில்கள், அனைத்து சரக்கு வாகனங்களிலும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். 

மேலும் தற்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ஒரே ஒரு ரெயில் தான் இயக்கப்படுகிறது. அது மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும்.

எனவே, மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தும்படி ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ரெயில் தினமும் காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வருகிறது. 

அதன்படி நேற்று முன்தினம் திண்டுக்கல்லில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனையிட்டனர். அதில் 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, தூத்துக்குடியை சேர்ந்த அக்காள், தம்பி கைது செய்யப்பட்டனர்.

500 மதுபாட்டில்கள் பறிமுதல் 

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்தது. இதையடுத்து வழக்கம் போல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம்தஸ்தாகிர், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சோதனையில் இறங்கினர்.

 அந்த ரெயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் சல்லடை போட்டு தேடினர்.
அப்போது ரெயிலின் பின்பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் இருக்கைகளுக்கு கீழ் சில பைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 

அதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பைகளை திறந்து பார்த்தனர். அவற்றில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து மொத்தம் 10 பைகளில் இருந்த 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது 

மேலும் அந்த பெட்டியில் பயணித்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 32), திருமங்கலத்தை சேர்ந்த நடராஜன் (26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். 

அதில் 2 பேரும் பெங்களூருவில் மதுவை மொத்தமாக வாங்கி மதுரைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவில் தமிழகத்துக்குள் வருகிறது. அதோடு அதிகாலை நேரத்தில் முக்கிய ஊர்களை கடந்து சென்று விடும். மேலும் ஊரடங்கால் பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருக்கிறது.

இதனால் போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்காது என்று நினைத்து அந்த ரெயிலில் மதுபானம் கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், போலீசார் உஷாராக இருந்ததால் 2 நாட்களும் மதுபான கடத்தல் தடுக்கப்பட்டு உள்ளது.

அதோடு 2 நாட்களில் 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
-----

Next Story