தேனியில் சாலையோரம் வீசப்படும் முக கவசம், பாதுகாப்பு உடைகள்; நோய் தொற்று பரவும் அபாயம்


தேனியில் சாலையோரம் வீசப்படும் முக கவசம்,  பாதுகாப்பு உடைகள்; நோய் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:15 PM IST (Updated: 1 Jun 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பயன்படுத்திய முக கவசம், பாதுகாப்பு உடைகள் சாலையோரம் வீசப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி:
தேனியில் பயன்படுத்திய முக கவசம், பாதுகாப்பு உடைகள் சாலையோரம் வீசப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
பாதுகாப்பு உடைகள்
கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் முழு பாதுகாப்பு கவச உடை அணிகின்றனர். அதேபோல், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை கூடங்கள், ஸ்கேன் மையங்களில் பணியாற்றுபவர்களும் இதேபோன்று பாதுகாப்பு கவச உடை அணிகின்றனர். 
இவ்வாறு அணியும் முழு பாதுகாப்பு கவச உடைகளை பயன்படுத்திய பின்பு அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் புறவழிச்சாலையின் இருபுறமும் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகளை சிலர் சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர். 
நோய் பரவும் அபாயம்
இதனால், சாலையின் இருபுறமும் ஏராளமான கவச உடைகள் ஆங்காங்கே கிடக்கின்றன. இதேபோல், முக கவசம், முகவுறை (பேஸ்ஷீல்டு) போன்றவையும் பயன்படுத்திய பின்பு இங்கு வீசப்பட்டுள்ளன. இது அந்த வழியாக செல்பவர்களுக்கும், அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களுக்கும் நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. 
எனவே, பொது இடங்களில் இதுபோன்று நோய் பரப்பும் வகையில் பாதுகாப்பு கவச உடைகளை வீசிச் செல்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் முக கவசம், கையுறை, முகவுறை போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதை கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story