ஆயுதப்படை போலீசார் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை
ஆயுதப்படை போலீசார் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசார் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் கொரோனா தடுப்பு மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான். இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம். தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை. அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை.
தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். 2 முககவசங்கள் அணிந்து கொள்வது சிறந்தது. அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது குளித்துவிட வேண்டும். ஏனென்றால் உங்கள் மூலம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவற்றை சில காலம் நாம் கடைபிடித்தால் தான் கொரோனா வைரஸை வெல்ல முடியும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ஆன்லைன் ரம்மி
மேலும் முக்கியமாக போலீசார் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைனில் பணத்தை இழந்து சில போலீசார் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம். தயவு செய்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள். புத்தகம் படியுங்கள், உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரைகண்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story