மோர்தானா அணைக்கு ரூ.4¾ கோடியில் புதிய சாலை. அதிகாரிகள் ஆய்வு
மோர்தானா அணைக்கு ரூ.4¾ கோடியில் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குடியாத்தம்
பழுதான சாலை
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும். இந்த அணை குடியாத்தத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், சைனகண்டா கூட்ரோட்டிலிருந்து இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தற்போது சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தனா அமைக்கு செல்லும் 8 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.
இந்த சாலையை சீரமைக்கவும், புதிதாக சாலை அமைக்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிதாக சாலை அமைக்க ஆய்வு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
இதனைத் தொடர்ந்து பாரத பிரதமரின் சாலைகள் அபிவிருத்தி திட்டம் பேஸ் 3 திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஊரக வளர்ச்சித் துறை வேலூர் செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அமலுவிஜயன் எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர் ரவி, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் குகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து மோர்தானா அணை பகுதியில் உள்ள போடியப்பனூர் கிராமத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஒரு பகுதியில் இருந்த அடுத்த பகுதிக்குச் செல்ல கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே போடியப்பனூர் கிராமத்துக்கும், மோர்தானா கிராமத்திற்கும் இடையே மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டு ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கான பணிகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story