நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் 40 கோழிகள் செத்தன


நாய்கள்  கடித்து குதறியதில் 13 ஆடுகள் 40 கோழிகள் செத்தன
x
தினத்தந்தி 1 Jun 2021 10:22 PM IST (Updated: 1 Jun 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்த நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் மற்றும் 40 கோழிகள் செத்தன.

உடுமலை
உடுமலை அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்த நாய்கள்  கடித்து குதறியதில் 13 ஆடுகள் மற்றும் 40 கோழிகள் செத்தன.
தென்னந்தோப்பு
உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரிய சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவர் தனது தென்னந்தோப்பில் நாட்டுக்கோழிகள் மற்றும் நாட்டுசேவல்களை வளர்த்து வருகிறார்.  இந்த தோப்பின் அருகில்  மற்றொரு தென்னந்தோப்பை சபரி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவர், அந் தோப்பிற்குள் தென்னை ஓலையால் வேயப்பட்ட கொட்டகை அமைத்து ஆடு, மாடு, நாட்டுகோழி மற்றும் சேவல் ஆகியவற்றை வளர்த்துவருகிறார்.
இந்த தோப்பில் கிருஷ்ணசாமி என்பவர் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று காலை மாட்டில் பாலை கறந்துகொண்டு குறிஞ்சேரிக்கு சென்று பால் கூட்டுறவு சங்கத்தில் கொடுத்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
13 ஆடுகள் செத்தன
அப்போது ஆடுகள் மற்றும் கோழிகள் அலறும் சத்தம் பலமாக கேட்டுள்ளது. உடனே அவர் விரைந்து வந்து பார்த்துள்ளார். அப்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் அங்கிருந்து கோழி மற்றும் சேவல்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடின.  தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கயிற்றில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியிருந்தது.. இதனால் 13 ஆடுகள் செத்துக்கிடந்தன. 
அத்துடன் அங்கு 10 கோழிகள் செத்து கிடந்தன. முன்னதாக அந்த தோப்பிற்கு அருகில் உள்ள சிவக்குமாரின் தென்னந்தோப்பிற்கு அந்த நாய்கள் கூட்டம் சென்று அங்கிருந்த கோழிகள் மற்றும் சேவல்களை கடித்து குதறியுள்ளது. இதில் 30 கோழிகள்மற்றும் சேவல்கள் செத்தன.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்ததும் கிராமநிர்வாக அலுவலர் முத்துக்குமார் சம்பவம் நடந்த தோப்பிற்கு சென்று ஆய்வு செய்தார்.  மேலும் இது தொடர்பாக  தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். 
தொடர் சம்பவங்கள்
இதுபோன்று இந்த சுற்று வட்டாரபகுதிகளில் விவசாயிகளின் தோட்டங்களுக்குள் நாய்கள் புகுந்து அங்குள்ள ஆடு, கோழிகளை கடித்து குதறுவது சமீபகாலமாக தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை பாதிப்புகள் சிறிய அளவிலே நடந்து வந்திருந்ததாகவும், இப்போது அதிகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தபகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story