தூத்துக்குடியில் தூங்கிக்கொண்டு இருந்தபோது பரிதாபம்: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலி
தூத்துக்குடியில் தூங்கி கொண்டு இருந்தபோது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த அவரது தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடியில் தூங்கிக்கொண்டு இருந்தபோது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தச்சு தொழிலாளி
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் நடராஜன். இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் நடராஜன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றொரு வீட்டில் தச்சு தொழிலாளியான ராஜமுருகன் என்பவர் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுடைய மகள் பரமேசுவரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். மகன் பெயர் சுந்தர் (21).
ராஜமுருகன் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்து உள்ளது. அதனை வீட்டின் உரிமையாளர் நடராஜன் கொத்தனார் மூலம் சரி செய்து உள்ளார்.
சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜமுருகன் மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரையில் உள்புறமாக இருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பரமேசுவரி, அவரது தம்பி சுந்தர் ஆகியோர் மீது விழுந்தது.
இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அக்காள் சாவு
ஆனால், செல்லும் வழியிலேயே பரமேசுவரி பரிதாபமாக இறந்தார். சுந்தர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருகில் படுத்திருந்த ராஜமுருகனும், அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண்ணீர்
மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது ராஜமுருகன் கண்ணீர் மல்க கூறுகையில், “என் பிள்ளைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். என்ஜினீயரிங் முடித்த எனது மகள் பரமேசுவரி கடந்த 6 மாதமாக தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தாள். என் மகனும் படிப்பு முடித்து விட்டால், எங்கள் கஷ்டம் தீரும் என்று நினைத்தேன். ஆனால், எல்லாம் வீணாகிவிட்டது” என்றார்.
வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story