8 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலி


8 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 Jun 2021 10:59 PM IST (Updated: 1 Jun 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் உருமாறிய கொரோனாவால் தினமும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் இறப்பு விகிதம் தினமும் உயர்ந்து வருகிறது. 

அதன்படி கொரோனாவால் இறப்பு அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். 

இங்கு நேற்று முன்தினம் வரை 397 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 8 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 
கடந்த ஓராண்டில் நிகழ்ந்த ஒருநாள் இறப்பில் இதுவே அதிகம் ஆகும். 

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 8 பேரும், பழனி அரசு மருத்துவமனையில் 4 பேரும், கரூர் மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் இறந்தனர்.

மேலும் இறந்தவர்களில் 40 வயது முதல் 50 வயதுக்குள் 2 பேரும், 50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் 4 பேரும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் 9 பேரும், 70 வயதுக்கு மேல் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். 

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று 12 சிறுவர்கள், 75 பெண்கள் உள்பட மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து 283 ஆனது. அதேநேரம் 515 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story