விருத்தாசலத்தில் பரபரப்பு ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு மண்டபத்துக்கு சீல்; பிரியாணி அண்டாவுடன் வெளியேறிய திருமண வீட்டார்


விருத்தாசலத்தில் பரபரப்பு ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு மண்டபத்துக்கு சீல்; பிரியாணி அண்டாவுடன் வெளியேறிய திருமண வீட்டார்
x
தினத்தந்தி 1 Jun 2021 11:03 PM IST (Updated: 1 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு விழா நடந்த மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால், பிரியாணி அண்டாவுடன் பாதியிலேயே திருமண வீட்டார் வெளியேறினர்.

விருத்தாசலம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் திருமணம் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்துவதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பலர், தங்கள் வீட்டு திருமணங்களை மிகவும் எளிமையான முறையில் கோவில் முன்பும், வீட்டில் வைத்தும் நடத்தி வருகின்றனர்.

திருமண வரவேற்பு விழா

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தடை உத்தரவை மீறி நேற்று திருமண வரவேற்பு விழா ஒன்று நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு சென்றனர். ஆனால் அதன் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து சந்தேகத்தின் பேரில், பின்பக்கமாக சென்று பார்த்தனர். அதில், பின்பக்க கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் மணமகன், மணமகள் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என்று பலர் பங்கேற்றிருந்தனர். 

பிரியாணி விருந்து

மேலும் இரு வீட்டாரின் உறவினர்களுக்கும் அங்கு பிரியாணி விருந்து தடபுடலாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி எவ்வாறு இதுபோன்று அதிகநபர்களை அழைத்து விழா நடத்தலாம் என்று கேட்டு திருமண வீட்டாரை எச்சரித்தனர். மேலும் அனுமதி அளித்த மண்டபத்தின் உரிமையாளரையும் கடுமையாக எச்சரித்தனர்.

மண்டபத்துக்கு  ‘சீல்’  

பின்னர் உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள், மண்டபத்துக்கு  ‘சீல்’  வைக்கப் போகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடன் திருமண வீட்டார்கள்,  மனிதாபிமான அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க  வேண்டாம் என கேட்டனர். 

அதற்கு நகராட்சி அதிகாரிகள், கொரோனா மனிதாபிமானத்தை பார்த்து பரவுவது கிடையாது. ஒருவருக்கு இருந்தால்கூட மற்றவர்களுக்கு உடனுக்குடன் பரவும் என எச்சரித்தனர். 

பரபரப்பு

அதனைத் தொடர்ந்து பிரியாணி இருந்த அண்டா, குண்டாக்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு திருமண வீட்டார் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து திருமண மண்டபத்தின் பின் பகுதியிலும், முன்பகுதியிலும் பூட்டுப் போட்டு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story