கடையில் அதிகாரிகள் இறைச்சி வாங்கி சென்றது வேலியே பயிரை மேய்ந்த சம்பவமாகியது


கடையில் அதிகாரிகள் இறைச்சி வாங்கி சென்றது வேலியே பயிரை மேய்ந்த சம்பவமாகியது
x
தினத்தந்தி 1 Jun 2021 11:35 PM IST (Updated: 1 Jun 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த கடையில் இருந்து அதிகாரிகள் இறைச்சி வாங்கி சென்றது வேலியே பயிரை மேய்ந்த சம்பவமாகி உள்ளது. தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த கடையில் இருந்து அதிகாரிகள் இறைச்சி வாங்கி சென்றது வேலியே பயிரை மேய்ந்த சம்பவமாகி உள்ளது. தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 அத்தியாவசிய பொருட்கள்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி வகைகளை அரசு அனுமதியுடன் வீதிகளில் சென்று பொதுமக்களுக்கு விற்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
இதையடுத்து திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஆனால் காந்திநகர் அருகே உள்ள ஏ.பி.நகர் பகுதியில் முழுஊரடங்கை மீறி மீன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
வாகனத்தில் வந்து...
இந்த நிலையில் காந்திநகர் 80 அடிரோட்டில் ஒரு நாட்டுக்கோழி சிக்கன் கடை நேற்று காலை வழக்கம்போல திறந்திருந்தது. அப்போது தமிழ்நாடு அரசு வாகனம் ஒன்று அந்த கடை முன்பு வந்து நின்றது. அதில் டிரைவர், 2 அதிகாரிகள் உள்பட 3 பேர் இருந்தனர். சிறிது நேரத்தில் அந்த கடையில் வெட்டி தயார் நிலையில் இருந்த இறைச்சியை வாகனத்தில் ஏற்றி, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
அந்த வாகனம் அங்கிருந்து சென்ற பின்னரும் அந்த கடை திறந்தே இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளதுடன், நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
கடும் நடவடிக்கை
அதே நேரத்தில் அரசு வாகனத்தில் வலம்வரும் இதுபோன்ற சில அதிகாரிகள் அரசின் உத்தரவை மதிக்காமல் ஊரடங்கை மீறி திறந்திருக்கும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களே வந்து இறைச்சியை வாங்கி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊரடங்கை மீறி செயல்படும் கடைகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story