கடந்த 2 ஆண்டுகளில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.19.73 உயர்வு; லாரி உரிமையாளர்கள் பாதிப்பு
எண்ணெய் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கிலும் கடந்த 2 ஆண்டுகளில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.19.73 வரை உயர்த்தி உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்:
விலை நிர்ணயம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை நிர்ணயம் பல ஆண்டுகளாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு மானியமாக வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமலே பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஆண்டுக்கு அதிகபட்சமாக 5 முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும். எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒரு ஆண்டாக தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
இது குறித்து நாமக்கல்லை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.70.88-க்கும், பெட்ரோல் ரூ.75.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு மே 31-ந் தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90.61-க்கும், பெட்ரோல் விலை ரூ.96.47-க்கும் விற்பனை ஆனது. கடந்த 2 ஆண்டுகளில் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.19.73-ம், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.21.43-ம் விலை உயர்ந்து உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் அதன் உயர்வுக்கு ஏற்ப லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. லாரிகளை கட்டுப்படியாகாத வாடகைக்கு இயக்க வேண்டி உள்ளதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், பொருட்கள் அனுப்புவதில் தேக்கம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்கு கிடைக்காமல் ஆங்காங்கே காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் லாரித்தொழில் நலிவடைந்து வருகிறது.
லாரிகளுக்கு வாங்கிய கடனுக்கான மாத தவணையை செலுத்த முடியாததால், வாகனங்களை நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிற டிசம்பர் மாதம் வரை லாரிகளுக்கு பெற்ற கடனுக்கான மாதாந்திர தவணைகளை அபராத வட்டி இல்லாமல் தள்ளி வைக்க வேண்டும்.
வாடகை நிர்ணயம்
இந்த ஊரடங்கு நேரத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. தினமும் ஒரு லிட்டருக்கு 20 பைசா, 25 பைசா வீதம் அதிகரித்து கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் ரூ.4.17-ம், பெட்ரோல் ரூ.5 வரையிலும் உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 22 பைசாவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இப்படி நாள் தோறும் விலை உயர்த்துவதற்கு பதில் குறிப்பிட்ட மாத இடைவெளியில் ஒரே முறையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்தால் சரக்கு, டிரெய்லர், டேங்கர் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதற்கேற்ப வாடகையை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். எனவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
Related Tags :
Next Story