தாளடி அறுவடை பணிகள் நிறைவு
கொரடாச்சேரி ஒன்றியத்தில் தாளடி அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
கொரடாச்சேரி;
கொரடாச்சேரி ஒன்றியத்தில் தாளடி அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணையில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் தாளடி நெற்பயிர்கள் அறுவடை நிறைவடைந்து வருகிறது. காவிரி டெல்டாவை பொருத்தவரை முப்பருவ சாகுபடி முறை இருந்து வந்தது. குறுவை, சம்பா, தாளடி என 3 பருவ நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது அடிக்கடி மாறியதாலும் விவசாயிகள் முப்போக சாகுபடியை மறந்து குறுவை மற்றும் சம்பா சாகுபடியில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
குறுவை சாகுபடி
மேலும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரித்த காலத்தில் குறுவை சாகுபடியையும் தவிர்த்து சம்பா சாகுபடி மட்டுமே செய்து வந்தனர். ஆற்று நீர் பாசனத்தோடு ஆழ்குழாய் பாசனம் மூலம் சாகுபடி செய்த விவசாயிகள் மட்டும் குறுவை மற்றும் சம்பா அல்லது குறுவை, சம்பா மற்றும் தாளடி என சாகுபடி செய்துவந்தனர். தற்போது கொரடாச்சேரி ஒன்றியத்தில் தாளடி சாகுபடி நிறைவு பெறுகிறது.
குறுவை சாகுபடிக்கு ஆயத்த பணிகளை தொடங்க உள்ளதால் விவசாயிகள் தாளடி பயிர்களை விரைந்து அறுவடை செய்து வருகின்றனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் இறுதியாக அரசவனங்காடு கிராமத்தில் தாளடி அறுவடை எந்திரம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் தாளடி அறுவடை நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இந்த அறுவடைக்கு பிறகு வயலில் தண்ணீர் வைத்து உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள்.
நம்பிக்கை
உழவு முடிந்த பின் குறுவை நெல் நாற்றுகளை நடவு செய்து சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள். இதைப்போல சம்பா சாகுபடி முடிந்து அதன் பின்னர் தாளடி சாகுபடி இல்லாது தரிசாக கிடந்த நிலங்களிலும் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வமுடன் தொடங்கி வருகின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 97 அடியாக உள்ளதாலும், தென் கிழக்கு பருவமழை ஜூன் 3-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
உரம்
குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு வருவதால் சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம், நுண்ணுயிர் உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story