திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 370 பேர் பலி


திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 370 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2021 12:31 AM IST (Updated: 2 Jun 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்றுக்கு ஒரே மாதத்தில் 370 பேர் பலியாகி உள்ளனர் என்ற தகவல் வேதனையானது.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்றுக்கு ஒரே மாதத்தில் 370 பேர் பலியாகி உள்ளனர் என்ற தகவல் வேதனையானது.
வேகமெடுக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களின் வாழ்வாதாரத்தை பறித்ததோடு, விலை மதிப்பில் லாத உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களும் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருவது வேதனைக்குரியது.

திருச்சி மாவட்டத்திலும் கடந்த மே மாதம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியும், வேதனை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 581 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் மாநகராட்சியின் கோட்டங்களான அரியமங்கலம்-63, கோ-அபிஷேகபுரம்-104, பொன்மலை-91, ஸ்ரீரங்கம்-67 என இதுவரை 325 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒரே மாதத்தில் 370 பேர் பலி

மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள அந்த நல்லூர்-22, லால்குடி-21, மணப்பாறை-22, மணிகண்டம்-13, மண்ணச்சநல்லூர்-37, மருங்காபுரி-8, முசிறி-11, புள்ளம்பாடி-14, தா.பேட்டை-9, திருவெறும்பூர்-38, தொட்டியம்-11, துறையூர்-20, உப்பிலியபுரம்-11, வையம்பட்டி-8 என 14 வட்டாரங்களிலும் 245 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் இதர மாவட்டங்களில் இருந்து திருச்சியில் சிகிச்சை பெற்று இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆகும்.

இதில் கடந்த மே 1-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை ஒரே மாதத்திக் மட்டுமே 370 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சியான புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஒருநாள் அதிக பட்ச உயிரிழப்பாக நேற்று முன் தினம் மட்டும் 30 பேர் செத்து மடிந்துள்ளனர். ஆக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வரை அதாவது, ஓராண்டில் பலியானவர்கள் எண்ணிக்கை மொத்தம் 211 பேர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசி

கொரோனாவின் முதல் அலையை ஒப்பிடும்போது இது அதிக அளவில் இருக்கிறது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டம் முழுவதும் 26 பேர் மட்டுமே பலியாகி இருந்தனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை. ஆஸ்பத்திரிகளில் தொற்றாளர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்கள் போன்றவற்றினாலேயே மே மாதத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு (2021) மே மாதம் வரை 57,215 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

அதே வேளையில் பூரண குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45,797 ஆகும். 10,837 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்களில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் மட்டும் 2,732 பேர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் 1,703 பேர். வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு டாக்டர்களின் ஆலோசனைப்படி கொரோனா சிகிச்சை பெறுவோர் மட்டும் 6,402 பேர் ஆவர். கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கிய கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 674 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

3 சுடுகாடுகளில் 620 பிணங்கள் எரிப்பு 

திருச்சி மாநகரில் உள்ள ஓயாமாரி, கோணக்கரை, ஸ்ரீரங்கம் மயானங்களில் ஒரு மாதத்தில் மட்டும் 620 பிணங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் மட்டுமே கொரோனா இறப்புகள் என மாவட்ட நிர்வாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. ஆனாலும், இவற்றில் பெரும்பாலான உடல்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றியே தகனம் செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘கொரோனா தொற்று உறுதி செய்யப்படாமல் வைரஸ் அறிகுறியுடன் இறப்பவர்களின் உடல்கள் பாதுகாப்பு கருதி கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அதே வேளையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாததால் கொரோனா இறப்பில் அவர்களை சேர்க்க முடியாது. கொரோனா இறப்பை வெளிப்படையாக சொல்கி றோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை' என்றனர்.

Next Story