1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்


1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2021 12:42 AM IST (Updated: 2 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் பொது சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தாக்குதல் தற்போது அதிகளவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இக்கட்டமான சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
 கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து விரைவில் வீடு திரும்புவீர்கள் என நம்பிக்கை ஊட்டி வருகிறார்.

கொரோனா இல்லாத நாடாக...

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சாலை வசதிகள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். இனி வரும் காலங்களில் கொரோனா இல்லாத நாடாக உருவாக்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் 85 சதவீத மக்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதியளவு சிகிச்சை பெறுவதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி

முகாமில் கண்டரமாணிக்கம் ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபர்கள் சேதுபாஸ்கரா கல்விக்குழுமம் தலைவர் சேதுகுமரன் சார்பில் அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் ஏழை எளியோர் பயனடையும் வகையில் தலா 10 கிலோ அரிசி விகிதம் 5 டன் அரிசியும், வி.கே.என். தொழில் குழும இயக்குனர் மணிகண்டன் சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளையும், சென்னை உயர்நீதி மன்ற வக்கீல் சித்தரைஆனந்தன் 1 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியையும் அமைச்சரிடம் வழங்கினர்.
 இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜோஸ், திருப்பத்தூர் தாசில்தார் ஜெயந்தி, கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு, கன.கருப்பையா, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோவிலூர் பரணி கிட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story