கபிஸ்தலம் அருகே, சொத்து தகராறில் வாலிபர் கொலை தலைமறைவாக இருந்த அண்ணன் கொச்சி விமான நிலையத்தில் கைது கத்தார் நாட்டுக்கு தப்ப முயன்றபோது பிடிபட்டார்


கபிஸ்தலம் அருகே, சொத்து தகராறில் வாலிபர் கொலை தலைமறைவாக இருந்த அண்ணன் கொச்சி விமான நிலையத்தில் கைது கத்தார் நாட்டுக்கு தப்ப முயன்றபோது பிடிபட்டார்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:05 AM IST (Updated: 2 Jun 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய அண்ணனை கொச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கத்தார் நாட்டுக்கு தப்ப முயன்றபோது அவர் பிடிபட்டார்.

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய அண்ணனை கொச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கத்தார் நாட்டுக்கு தப்ப முயன்றபோது அவர் பிடிபட்டார். 

வாலிபர் வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டம் கல்விபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன்கள் ராஜேஷ்கண்ணா(வயது 32), வினோத் கண்ணா(30). இவர்களுக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகும். வினோத் கண்ணா வலங்கைமானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜேஷ் கண்ணா, வினோத் கண்ணா ஆகியோரிடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 
கடந்த ஆண்டு(2020) செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வினோத் கண்ணா, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே மணலூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வலங்கைமானுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். கும்பகோணம்- திருவையாறு சாலையில் மேட்டுத்தெரு அருகே சென்றபோது அவரை ராஜேஷ் கண்ணா மற்றும் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். 

கத்தாருக்கு தப்ப முயற்சி

இதுதொடர்பாக ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் மீது கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜேஷ்கண்ணாவை கபிஸ்தலம் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவருடைய பாஸ்போர்ட்டையும் போலீசார் முடக்கி வைத்தனர். இந்த நிலையில் கடந்த மாதம்(மே) 30-ந் தேதி ராஜேஷ் கண்ணா கத்தார் நாட்டுக்கு தப்பி செல்வதற்காக கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். 
அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருப்பதும், அவருக்கு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 

சிறையில் அடைப்பு

இதையடுத்து கொச்சி விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் காரில் கொச்சி சென்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜேஷ்கண்ணாவை நேற்று முன்தினம் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 
நீதிபதி நாகராஜ், ராஜேஷ்கண்ணாவை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதகைத்தொடர்ந்து அவர் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story