சேரன்மாதேவியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் தற்கொலை
சேரன்மாதேவியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஆலடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் ஆறுமுகம் (வயது 25). பொக்லைன் ஆபரேட்டர். தேவர்குளம் அருகே உள்ள சொக்கநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் மணிமேகலை (21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவருக்கும், ஆறுமுகத்திற்கும் கடந்த 24-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிமேகலை தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு மணிமேகலை தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடடினயாக சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியானது. மணிமேகலை திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மணிமேகலையின் பெற்றோர் அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 24-ந் தேதி மணிமேகலைக்கும், ஆறுமுகத்திற்கும் திருமணம் செய்து வைத்தனர். இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை கடந்த 31-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனினும் தற்கொலைக்கு இதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதுகுறித்து சேரன்மாதேவி போலீசில் மணிமேகலை தாயார் மாரியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதிக் தயாள் விசாரணை நடத்தி வருகிறார். சேரன்மாதேவியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story