ஊரடங்கால் வியாபாரிகள் வராததால் அழுகி வீணாகும் கிர்ணி, தர்பூசணி பழங்கள்


ஊரடங்கால் வியாபாரிகள் வராததால் அழுகி வீணாகும் கிர்ணி, தர்பூசணி பழங்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 2:15 AM IST (Updated: 2 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் கிர்ணி, தர்பூசணி பழங்கள் அழுகி வீணாகும் நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிமடம்:

வீணாகும் பழங்கள்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை காலத்திற்கு உகந்த கிர்ணிப்பழம், தர்பூசணி, பப்பாளி போன்ற பழவகை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். பழ வகைகள் நன்றாக விளைந்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வுகளில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பழக்கடைகள், குளிர்பான கடைகள் திறக்கப்படாமல் இருப்பதாலும், வியாபாரிகள் வாங்க வராததாலும் நிலங்களில் சாகுபடி செய்த டன் கணக்கிலான கிர்ணி, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் பறிக்கப்பட்ட பழங்கள் குழிதோண்டி அதில் போட்டு மூடப்படுகிறது. சில இடங்களில் பறிக்கப்படாமல் வயலிலேயே பழங்கள் அழுகி அதே நிலத்திற்கு உரமாகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.
பறிக்கப்படாமல் அழிகிறது
இதுகுறித்து ஆண்டிமடம் அருகே ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 20 ஏக்கருக்கு மேல் கிர்ணி, தர்பூசணி பழ வகைகள் பயிரிட்டு உள்ளோம். ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. பயிரிடப்பட்ட பழ வகைகள் நன்றாக காய்த்துள்ளது.
ஒரு ஏக்கரில் விளைவிக்கப்பட்ட பழங்களை ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை செய்யலாம். ஆனால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வியாபாரிகள் யாரும் பழங்களை வாங்க முன் வரவில்லை. இதனால் பழங்கள் பறிக்கப்படாமல் அழிகிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
மேலும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் இதனை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தமிழ் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும். தொடர்ந்து விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இழப்பீட்டுத் தொகையும், சிறப்பு சலுகைகளையும் அரசிடம் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Next Story