சாராய ஊறல் போட்ட 11 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் சாராய ஊறல் போட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
சாராய ஊறல்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்கும் நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? சாராய ஊறல்கள் போடப்பட்டு உள்ளதா? என்று பல ஊர்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி பகுதியில் தனிநபருக்குச் சொந்தமான வயல்வெளியில் பூமிக்கு அடியில் சாராய ஊறல் போட்டு புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
6 பேர் கைது
இது குறித்து மதுவிலக்கு பிரிவு போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இலையூர் மேலவெளியை சேர்ந்த வினோத்(வயது 25), வெற்றி(26), சாமிதுரை(27), மகாதேவன்(28), செல்வம்(37), தமிழ்ச்செல்வன்(27) ஆகிய 6 பேரும் சாராய ஊறல் போட்டது தெரியவந்தது. இதையடுத்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கீழப்பழுவூர்
இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவில் எசனை கிராமத்தில் சட்டவிரோதமாக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை சூப்பிரண்டு திருமேனி மற்றும் மது ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கோவில் எசனை மேலக்காடு பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் சாராய ஊறல் பேரல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம் (37), அன்புராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் கோவில் எசனை அருகே உள்ள இலந்தைகூடம் கிராமத்தில் ராஜா (50) என்பவர் சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டிருப்பதாக வெங்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் இலந்தைகூடம் கிராமத்திற்கு விரைந்து சென்று சாராய ஊறலை கைப்பற்றி ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி
மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(49). இவரும், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிழக்கு தெருவை சேர்ந்த செல்வராசுவும்(57) சேர்ந்து, ரவி வீட்டில் சாராய ஊறல் போட்டு இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குருவாலப்பர் கோவில் கிராமத்திற்கு சென்று ரவி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 10 லிட்டர் சாராய ஊறல் பானையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி ரவி, செல்வராசு ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story