திப்பணம்பட்டியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட கோரிக்கை


திப்பணம்பட்டியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2021 3:22 AM IST (Updated: 2 Jun 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

திப்பணம்பட்டியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திப்பணம்பட்டி கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது கடந்த சில மாதங்களாக சிறிய கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் என்பது வருவாய் ஆவணங்களை பராமரிப்பது, நிலவரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிடச்சான்று வினியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளை செய்ய கிராமத்துக்கு தேவையான மிக முக்கியமான அலுவலகம் ஆகும்.
திப்பணம்பட்டி கிராம நிர்வாக அலுவலகமானது திப்பணம்பட்டி மற்றும் அரியப்புரம் பஞ்சாயத்துக்களை சேர்ந்த 17 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. இத்தனை மக்களுக்கான கிராம நிர்வாக அலுவலகம், எந்த ஒரு வசதிகளும் இன்றி ஒரு சிறிய அறையில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே உடனடியாக இந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story