கொரோனா தொற்றால் சேவை குறைப்பு: பயணிகள் இன்றி வெறிச்சோடிய சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம்


கொரோனா தொற்றால் சேவை குறைப்பு: பயணிகள் இன்றி வெறிச்சோடிய சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 2 Jun 2021 4:03 AM IST (Updated: 2 Jun 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் ரெயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் இன்றி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

சேலம்:
கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் ரெயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் இன்றி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கிய ரெயில் நிலையம்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையமாக விளங்குகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ரெயில்கள் சேலம் வழியாக செல்கின்றன.
அதே போன்று சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை, கரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சேலம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்கள் வந்து சென்ற வண்ணம் இருக்கும். இதனால் 24 மணி நேரமும் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காணப்படும்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் பயணிகளின் வசதிக்காக ஒரு சில சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சிறப்பு ரெயில்களின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தற்போது ஒரு சில சிறப்பு ரெயில்கள் மட்டும் செல்கின்றன.
எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் பயணிகள் இன்றியும், ரெயில்கள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் பயணிக்க குறைந்த அளவு பயணிகளே வருகிறார்கள். இதனால் அந்த நேரங்களிலும் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

Next Story