திருப்பத்தூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சி விற்பனை.கணவன்- மனைவி கைது
திருப்பத்தூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சி விற்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்
சாராயம், மது பாட்டில்கள் கடத்தல்
தமிழ்நாட்டில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மதுவிலக்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் ஒரு வாரத்திற்கும் மேலாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி கிராமத்தில் சாராய விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
குக்கரில் சாராயம் காய்ச்சினர்
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 33) என்பவர் தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதை பாக்கெட்டுகளில் அடைத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக சப்ளை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தலைமையில் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை யிட்டனர்.
அப்போது கோவிந்தசாமி தனது வீட்டில் சமையல் அறையிலேயே கியாஸ் அடுப்பை கொண்டு,சாம்பார் வைக்கும் குக்கரில் சாராயம் காய்ச்சியதும், பேரல்களில் சாராய ஊறல்கள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 750 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கோவிந்தசாமியையும், சாராயம் காய்ச்சுவதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி வள்ளியையும் (30) போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story