கோடீஸ்வரர் எனக்கூறி கொண்டு பெண்ணை ஏமாற்றி 3-வதாக திருமணம் செய்த வாலிபர் கிராம தலைவர்களால் பிரித்து வைக்கப்பட்டனர்


கோடீஸ்வரர் எனக்கூறி கொண்டு பெண்ணை ஏமாற்றி 3-வதாக திருமணம் செய்த வாலிபர் கிராம தலைவர்களால் பிரித்து வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:29 PM IST (Updated: 2 Jun 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் கோடீஸ்வரர் எனக்கூறிக் கொண்டு பெண்ணை ஏமாற்றி வாலிபர் 3-வது திருமணம் செய்திருந்தார். கிராம தலைவர்களால் 2 பேரும் பிரித்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ராமநகர், 

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் இருக்கும் கிராமத்தில் ஒரு பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபரின் அறிமுகம், பெண்ணின் பெற்றோருக்கு கிடைத்தது. அப்போது அந்த வாலிபர் தான் ஒரு கோடீஸ்வரர் என்றும், திருமணத்திற்காக பெண் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்காக தன்னுடைய வங்கி கணக்கில் ரூ.3½ கோடி இருப்பதற்கான ஆவணங்களை அந்த வாலிபர், அவர்களிடம் காட்டி இருந்தார். அதாவது போலியான வங்கி கணக்கு புத்தக்கத்தில் ரூ.3½ கோடி இருப்பதாக வாலிபர் காட்டி இருந்தனர். இதனை அந்த பெண்ணின் பெற்றோரும் நம்பினார்கள். பின்னர் அந்த வாலிபரையே தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று, அது தன்னுடையது என்றும் அந்த வாலிபர் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக வாலிபரை பற்றி மற்ற நபர்களிடம் விசாரிக்க முடியாததால், வசதிபடைத்தவர் என நினைத்து தங்களது மகளை, அவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர். ஊரடங்கு காரணமாக கிராமத்தில் உள்ள பெண்ணின் வீட்டில் வைத்தே திருமணம் நடந்திருந்தது.

இதற்கிடையில், திருமணத்திற்கு வந்திருந்த பெண்ணின் உறவினர், அந்த வாலிபரை தனக்கு தெரியும் என்றும், அவருக்கு இதற்கு முன்பு திருமணமாகி விட்டதாகவும் கூறினார். இதையடுத்து, வாலிபர் பற்றி பெண்ணின் பெற்றோர் விசாரித்ததில், அவருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி விட்டதும், 3-வதாக தான், கோடீஸ்வரர் எனக்கூறி தங்களது மகளை திருமணம் செய்திருந்ததும் தெரியவந்தது.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநகரை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபருடன், பெண்ணின் பெற்றோர் தகராறு செய்தார்கள். அதே நேரத்தில் வாலிபருக்கு ஆதரவாக கிராமத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர், அந்த குடும்பத்தினருக்கு திருமணத்திற்கு ஆன செலவு மற்றும் அபராதமாக பெருந்தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு வாலிபர் சம்மதம் தெரிவித்ததால், அந்த வாலிபரையும், பெண்ணையும் பிரித்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story