வருசநாடு அருகே இ-பாஸ் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள்


வருசநாடு அருகே இ-பாஸ் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:40 PM IST (Updated: 2 Jun 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே இ-பாஸ் இல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் கேரளாவுக்கு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அந்த எஸ்டேட்டில் சம்பளம் குறைவாக வழங்குவதாக கூறி வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்காக கேரளாவில் உள்ள மற்றொரு தனியார் எஸ்டேட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர். 
அதன்படி நேற்று வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஜீப் மூலம் கேரள எல்லையை ஒட்டியுள்ள குமணன்தொழு பகுதிக்கு வந்தனர். பின்னர் கேரளாவுக்கு செல்ல வேறு வாகனம் கிடைக்காததால் தொழிலாளர்கள் அனைவரும் நீண்ட நேரமாக குமணன்தொழுவில் காத்திருந்தனர். 
இதை பார்த்த அப்பகுதி மக்கள் மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்கள் எதுவும் கேரளாவுக்கு செல்லாது. எனவே மீண்டும் வெள்ளிமலை எஸ்டேட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் தொழிலாளர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். 
இதனையடுத்து ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன் உள்ளிட்டோர் குமணன்தொழுவிற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் முறையாக இ-பாஸ் எடுக்க விண்ணப்பம் செய்து, அதன் பின்னர் கேரளாவுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மீண்டும் வெள்ளிமலை எஸ்டேட்டுக்கு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு போலீசார் மற்றும் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. 

Next Story