மகனுக்கு மருந்து வாங்குவதற்காக, மைசூருவில் இருந்து 280 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து பெங்களூரு வந்த தொழிலாளி


மகனுக்கு மருந்து வாங்குவதற்காக, மைசூருவில் இருந்து 280 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து பெங்களூரு வந்த தொழிலாளி
x
தினத்தந்தி 2 Jun 2021 9:55 PM IST (Updated: 2 Jun 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்குவதற்காக மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு 280 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து தொழிலாளி ஒருவர் வந்துள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா கனிகனகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சேத்தன் (12). சேத்தன் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால், அவன் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். தற்போது சேத்தன், டாக்டர்களின் வழிகாட்டுதல்படி வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறான்.

ஆனந்த், மாதந்தோறும் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி செல்வது வழக்கம். தற்போது, சேத்தன் சாப்பிட வேண்டிய மருந்து, மாத்திரைகள் தீர்ந்துவிட்டதாக தெரிகிறது.

ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொது போக்குவரத்து மூலம் ஆனந்தால் பெங்களூருவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு முறை மருந்து மாத்திரை சாப்பிட தவறிவிட்டால், அந்த மருந்தை கூடுதலாக 18 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பெங்களூருவில் இருந்து மருந்து வாங்கி வர ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் செய்வதறியாது ஆனந்த் திகைத்தார். ஆனால் எப்பாடு பட்டாவது தனது மகனை குணப்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார்.

இந்த மனஉறுதியால் அவர், தன்னுடைய சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 23-ந்தேதி டி.நரசிப்புராவில் இருந்து தனது சைக்கிளில் பெங்களூரு நோக்கி புறப்பட்டார். பன்னூர், மலவள்ளி, கனகபுரா வழியாக பெங்களூரு நோக்கி சென்றார். வழியில் கனகபுராவில் ஒரு கோவிலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன்பின்னர் சைக்கிளை மிதிக்க தொடங்கினார். இரவு 10 மணி அளவில் அவர் பெங்களூரு பனசங்கரியை சென்றடைந்தார்.

அன்று இரவு பனசங்கரியில் தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு சென்றார். அவர், ஆனந்த்துக்கு தங்க இடமும், சாப்பாடும் கொடுத்தும் உதவினார். இதையடுத்து ஆனந்த், மறுநாள் காலை அங்கிருந்து நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

நிமானஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்து மருந்து, மாத்திரை வேண்டும் என்று கேட்டார். அப்போது, ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து இல்லாத நிலையில் எவ்வாறு வந்தீர்கள் என்று டாக்டர், ஆனந்திடம் கேட்டார். அப்போது ஆனந்த், சைக்கிளில் இவ்வளவு தூரம் வந்ததாக தெரிவித்தார். இதனை கேட்டு மெய்சிலிர்த்து போன அந்த டாக்டர், ரூ.1,000-த்தை ஆனந்திடம் கொடுத்து பத்திரமாக செல்லும்படி கூறி மருந்துகளை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்குவதற்காக மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் இருந்து பெங்களூருவுக்கு 280 கிலோ மீட்டர் தூரத்தை தொழிலாளி கடந்து வந்துள்ளார்.

ஆனந்தை பொறுத்தவரை தனது மகனை குணப்படுத்த வேண்டும் என்பதில் மன உறுதியாக இருந்ததால் இந்த தூரம் ஒரு சவாலாக இருக்கவில்லை..!!!

Next Story