தற்காலிக பூ மார்க்கெட் தொடக்கம்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள், இங்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 10 டன் அளவுக்கு பூக்கள் விற்பனையாகும்.
மேலும் இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிலையில் கொரோனா பரவலால் கடந்த 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சாலையோரத்தில் பூக்களை விற்பனை செய்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்ததோடு, பூக்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் பூ விற்பனை நிறுத்தப்பட்டது. இது வியாபாரிகளை மட்டுமின்றி விவசாயிகளையும் பாதித்தது.
எனவே, தற்காலிக பூ மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் நேற்று தொடங்கப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதில் மல்லிகை, முல்லைப்பூ கிலோ தலா ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.100-க்கும், அரளிப்பூ ரூ.50-க்கும், கோழிக்கொண்டை, செண்டு மல்லி ஆகியவை தலா ரூ.20-க்கும் விற்பனை ஆனது.
Related Tags :
Next Story