மேலும் 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு வர உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு வர உள்ளது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
19 ஆயிரம் டோஸ் வருகை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி கோரினர். அதன்படி சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 19 ஆயிரம் டோஸ் ஒதுக்கப்பட்டு திருப்பூருக்கு வருகிறது.
பிரித்து அனுப்பும் பணி
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் கோவிஷீல்டு 15 ஆயிரம் டோஸ் மற்றும் கோவேக்சின் 4 ஆயிரம் டோஸ் என மொத்தம் 19 ஆயிரம் டோஸ் திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story