நெல்அறுவடை எந்திர உரிமையாளர் மர்மசாவு வீட்டில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்த நண்பர்கள் 2 பேர் கைது
நெல்அறுவடை எந்திர உரிமையாளர் மர்ம சாவு வழக்கில் அவரை கட்டயாப்படுத்தி வீட்டில் அடைத்து வைத்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்
நெல்அறுவடை எந்திர உரிமையாளர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(வயது 51). நெல் அறுவடை எந்திர உரிமையாளரான இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லை அதிகரித்தது. இதையடுத்து அறுவடை எந்திரங்களை விற்று கடனை அடைத்து விட முடிவு செய்த செல்வம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தில் அருண் என்பவரின் வீட்டில் செல்வம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் சுதாரகன் கொடுத்த புகாரின் பேரில் கச்சிரயாப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நண்பர்களிடம் விசாரணை
இதற்கிடையே செல்வத்தின் நண்பர்களான தாவடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன்(28), பாலன் மகன் ஜெயராமன்(40) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது வெங்கடேசன் ஜெயராமன் ஆகியோர் தங்களுடைய நெல் அறுவடை எந்திரங்களையும் செல்வத்தின் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்வத்துக்கு கடன் கொடுத்த நபர்கள் இவர்களது நெல்அறுவடை எந்திரங்களையும், அதற்கான வாடகை பணத்தையும் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன், வெங்கடேசன் இருவரும் ஆந்திராவுக்கு சென்று செல்வத்தை கட்டயாப்படுத்தி அழைத்து வந்து தாவடிப்பட்டில் அருண் என்பவரின் வீ்ட்டில் அடைத்து வைத்திருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதையடுத்து வெங்கடேசன், ஜெயராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்வத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லவது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும். அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story