வனப்பகுதியை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா
உடுமலை பகுதியில் உள்ள விளைநிலங்கள், மலைஅடிவாரம் மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தளி
உடுமலை பகுதியில் உள்ள விளைநிலங்கள், மலைஅடிவாரம் மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் சீமைகருவேல மரங்கள் அகற்றப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சீமைகருவேல மரங்கள்
உயிரினங்களுக்கு வாழ்வு அளிப்பதிலும், சுற்றுச்சூழலை காப்பதிலும், வெப்பமயமாதல், காற்றுமாசு, இயற்கை பேரிடர்களை தடுப்பதிலும், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதிலும் பல்வேறு விதமான மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை அதிகமாக உள்ள பகுதியில் சீரான மழைப்பொழிவும் அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் ஆரோக்கியமே அதற்கு சான்று. ஆனால் சமுதாயத்திற்கும், உயிரினங்களுக்கும் நன்மை தரும் மரங்களுக்கு மத்தியில் மண்ணுக்கும், மனிதனுக்கும் பயன் இல்லாத உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய சீமைகருவேல மரங்கள் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. பயிர்களுக்கு வேலியாகவும், விறகுக்கும் பயன்தரும் என்று நினைத்து தவறுதலாக கொண்டுவரப்பட்ட இதன் விதைகள் நாளடைவில் பல்கிப்பெருகி பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அதற்கு பராமரிப்பு, தண்ணீர் தேவையில்லை. மழைக்காலங்களில் வேர் முடிச்சுகளில் நீரை சேமித்து கொண்டு தானாகவே வளர்ந்து கோடை காலத்தில் கூட பசுமையாக பச்சை பசேலென்று இருக்கிறது. மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதால் அதிக வெப்பமும் ஏற்படுகிறது. இதனால் இந்த மரத்தின் நிழலில் மட்டுமல்ல சற்று தொலைவில் கூட எந்த தாவரங்களும், மரங்களும் வளர்வதில்லை. இதனால் மழைபொழிவும் குறைந்து நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர் பற்றாக்குறையை தோற்றுவித்து எண்ணற்ற மூலிகைகளின் அழிவிற்கும் இந்த மரங்கள் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.
அசுர வளர்ச்சி
இதையடுத்து சீமைகருவேல மரங்களை அழிக்கக்கோரி பரவலாக கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சீமைகருவேல மரங்களை அழிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதேபோன்று ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனச்சரகத்தின் ஒருபகுதியில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களும் வனத்துறையினர் சார்பில் வேரோடு அகற்றப்பட்டது.
ஆனால் அதுவும் முழுமையாக முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் சிதறிக்கிடக்கின்ற விதைகள் அடிவாரப்பகுதியில் உள்ள அணைப்பகுதிக்கு மழைநீரில் அடித்து வரப்படுகிறது. பின்பு அங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பின் போது யாருடைய உதவியும் இல்லாமல் குளம், குட்டைகள், விளைநிலங்கள், ஏரியின் கரைகளுக்குச் சென்று தானாகவே வளர்ந்து வருகிறது.அதன் பரவலை கட்டுப்படுத்தி அளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
முழுமையாக அகற்றப்படுமா?
மேலும் சீமைகருவேல காய்கள் யானைகளுக்கு பிடித்தமான உணவு என்பதால் அதை விரும்பி உண்கின்றன. இதற்காக அடிவாரப்பகுதிக்கு வருகை தரும் யானைகள் காய்களை தின்றுவிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.
அத்துடன் யானைகளுக்கு ஜீரணசக்தி குறைவு என்பதால் சீமைக்கருவேல மரத்தின் விதைகள் அதன் சாணத்தின் மூலமாகவே மீண்டும் பூமிக்கு வந்து யானை செல்லுமிடமெல்லாம் பரவலை தொடர்ந்து வருகிறது. எனவே வனப்பகுதியிலும், சம தளப்பரப்புகளிலும் வளர்ந்து வருகின்ற சீமைகருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story