கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வீடுகளுக்கே சென்று வாரிசு சான்று வழங்க நடவடிக்கை


கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வீடுகளுக்கே சென்று வாரிசு சான்று வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2021 11:01 PM IST (Updated: 2 Jun 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று வாரிசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாகவும், பிற நோயின் காரணமாகவும் கடந்த 3 மாதங்களில் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து இ-சேவை மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இறந்த நபர்களின் வாரிசுகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், காப்பீட்டு தொகைகள் பெறுவதற்கு தேவையான வாரிசு சான்றினை பெற இணைய வழி வாயிலாக விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் பதிவுகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வாரிசு சான்று

நிலுவையில் உள்ள அனைத்து இறப்பு பதிவுகளையும் உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், சம்மந்தப்பட்ட நபர்களுக்கான வாரிசுசான்றுகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் வருவாய்த்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று வாரிசு சான்று வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 3 மாதத்தில் மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்பு குறித்த பதிவுகள் சுகாதாரத் துறை துணை இயக்குநர் வாயிலாக பெறப்படும். அந்த பட்டியலை தாலுகா வாரியாக பிரித்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது இறப்புச்சான்று நகல் வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்

மேலும் இதுவரை வாரிசு சான்று பெறாத நபர்களிடமிருந்து வாரிசுசான்று வழங்கிட தேவைப்படும் அடிப்படை விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் இறந்த நபரின் வாரிசுகளிடம் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பெற்று அதனை தாசில்தாரிடம் சமர்ப்பிப்பார்கள். அதன்பின் இ-சேவை இணையதளத்தில் புதிய வாரிசு சான்று விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வார்கள். 

பின்னர் ஆன்லைன் முறையில் வழக்கமான நடைமுறையினை பின்பற்றி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகியோரின் கள விசாரணை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் தாசில்தார் ஒப்புதல் அளிப்பார். தொடர்ந்து அசல் வாரிசு சான்றினை சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வீட்டிற்கே சென்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story