வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வீடுகளில் கோலமிட்டு,சட்ட நகலை எரிக்கும் போராட்டம் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவு


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வீடுகளில் கோலமிட்டு,சட்ட நகலை எரிக்கும் போராட்டம்  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு  குழு  முடிவு
x
தினத்தந்தி 2 Jun 2021 11:13 PM IST (Updated: 2 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வீடுகளில் கோலமிட்டு, சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கடலூர், 

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடலூரில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கீரன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சட்ட நகல் எரிப்பு

கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் 182 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதத்தை தாண்டி உள்ளது.

 அதனால் மத்திய அரசு, விவசாயிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் (சனிக்கிழமை)  நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்தப்பட உள்ளது. 

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வீடுகளில் கோலம் போடுவது, வேளாண் சட்ட நகலை எரிப்பது உள்ளிட்ட கண்டன இயக்கங்களை நடத்துவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் விவசாய சங்கத் தலைவர்கள் ஆலம்பாடி வேல்முருகன், அயன் குறிஞ்சிப்பாடி ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரம் வெங்கடேசன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story