கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் பெற பொதுமக்கள் குவிந்தனர்
திருப்பூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் பெற பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்
திருப்பூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் பெற பொதுமக்கள் குவிந்தனர்.
ரேஷன் கடைகள்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கையும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். வருகிற 7-ந் தேதி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கையும் மீறி வீட்டை விட்டு வெளியே வருகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ தேவைகளுக்கு வெளியே வருகிறவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கொரோனா முழு ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இதிலும் முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
டோக்கன் பெற குவிந்த பொதுமக்கள்
இதன் பின்னர் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா நிவாரண நிதி 2-வது கட்டமாக இந்த மாத முதல் வாரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த நிவாரண தொகை வாங்குவதற்காக டோக்கன்கள் நேற்று மாநகர் பகுதிகளில் உள்ள பல ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலரும் ரேஷன் கடைகளில் குவிந்தனர்.
வெள்ளியங்காட்டில் உள்ள ரேஷன் கடைகள் உள்பட மாநகர் பகுதிகளில் உள்ள பல ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பல ரேஷன் கடைகளுக்கு டோக்கன்கள் சென்று சேராததால் அங்கு காத்துநின்ற பொதுமக்களிடம், ரேஷன் கடைகள் ஊழியர்கள் டோக்கன் வரவில்லை. டோக்கன் வந்ததும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்து அனுப்பினர். இதனால் பலர் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் சென்றனர்.
Related Tags :
Next Story