திருட்டில் ஈடுபட்ட 2 பேரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்பு
திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
திருப்பூர்
திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
தொடர் திருட்டு
திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பழவஞ்சிபாளையம் ஐஸ்வர்யா நகரில் ராமன் என்பவரது வீட்டில் கடந்த 24-ந்தேதி 6 பவுன் நகை மற்றும் ரூ.32 ஆயிரம் திருட்டு போனது. இதுபோல் பழவஞ்சிபாளையம் சிவசக்தி நகரில் சிவராஜ் என்பவரது வீட்டில் 26-ந் தேதி 12 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் திருட்டு போனது. மேலும், இடுவம்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி டி.வி. மற்றும் மடிக்கணினி, அரை பவுன் நகை ஆகியவை திருட்டு போனது.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடையவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் (குற்றம் மற்றும் போக்குவரத்து) கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
20 பவுன் நகை மீட்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டியார் தோட்டம் செட்டிபாளையம் ரோடு பகுதியில் அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவரிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பறித்ததாக கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அழகர்சாமி கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மீனாகன்னிபட்டியை சேர்ந்த ராமர் (வயது 24) என்பதும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பொம்மனம்பட்டியை சேர்ந்த கீர்த்தி (21) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டதும், மேலும், மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 பேரிடமும் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம், வெள்ளி பொருட்கள், மோட்டார் சைக்கிள், டி.வி., மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்கள் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story