மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீ விபத்து
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகவதி அம்மன் கோவில்
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். இந்த கோவிலில் கூரைகள் அனைத்தும் மண்ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் உள்ள பகவதி அம்மன் சுமார் 15 அடிக்குமேல் புற்று வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும் கோவிலில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடந்து வருகிறது.
தீ விபத்து
இந்தநிலையில் நேற்று அதிகாலை கோவிலை திறப்பதற்காக பூசாரிகள் வந்தனர். காலை 6.30 மணிக்கு கோவிலின் கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது.
பூஜைகள் முடிந்த சிறிது நேரத்தில் கோவிலின் உட்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் கோவிலுக்குள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது கோவிலின் கருவறை மற்றும் மேற்கூரை பகுதிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அங்கு திரண்டனர். பிறகு கோவில் ஊழியர்கள், பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் மள... மள...வென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அந்த சமயத்தில் காற்றும் வீசியதால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தக்கலை தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் கோவிலின் கருவறை, மேற்கூரைகள் எரிந்து சேதம் அடைந்தன. கோவிலில் இருந்த சில பூஜை பொருட்கள் மற்றும் அம்மனுக்கு சாத்தப்படும் துணிகள் மற்றும் வெள்ளி நகைகளும் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த குமரி மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், மண்டைக்காடு போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று, தீ விபத்து நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
தீ முழுமையாக அணைந்த பின்பு கோவில் ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story