கொரோனா தொற்றில் இருந்து குணமான பார்வையற்ற நபரை பஸ் நிலையத்தில் இறக்கி விட்ட அவலம்


கொரோனா தொற்றில் இருந்து குணமான பார்வையற்ற நபரை பஸ் நிலையத்தில் இறக்கி விட்ட அவலம்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:39 PM IST (Updated: 2 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றில் இருந்து குணமான பார்வையற்ற நபரை பஸ் நிலையத்தில் இறக்கி விட்ட அவலம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த கஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 48 வயதான கண் பார்வையற்றவர். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 22-ந் தேதி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக அவரின் தாயார் இருந்து வந்தார். சிகிச்சை முடிந்து குணமான நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதையடுத்து அவரை வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த வாகனத்தின் டிரைவர் ‘உங்கள் பகுதிக்கு வாகனம் செல்லாது’ என்று கூறி அவரை, தாயுடன் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டார். ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் அந்த கண் பார்வையற்றவர், தாயுடன் செய்வதறியாது திகைத்தார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அவருக்கு உதவி செய்தனர். இதுகுறித்து அறிந்த அறம் சிகரம் தொண்டு நிறுவனத்தினர் கண் பார்வையற்றவர், தாயாருக்கு உணவு வழங்கினர். பின்னர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 2 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கொரோனா தொற்றில் இருந்து குணமான கண் பார்வையற்றவரை, தாயுடன் மனிதாபிமானமற்ற முறையில் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story