சாலையில் சுற்றியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்


சாலையில் சுற்றியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்
x
தினத்தந்தி 3 Jun 2021 12:09 AM IST (Updated: 3 Jun 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சாலையில் சுற்றியவர்களை பிடித்து போலீசார் உறுதி மொழி எடுக்க வைத்ததுடன் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்கள்.

வால்பாறை

வால்பாறையில் சாலையில் சுற்றியவர்களை பிடித்து போலீசார் உறுதி மொழி எடுக்க வைத்ததுடன் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்கள். 

முழு ஊரடங்கு 

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மளிகை, காய்கறி கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், வாகனங்களில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

 அதுபோன்று பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் வால்பாறையில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளி நபர்கள் உள்ளே வருவதை தடுக்க பல இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

போலீசார் வாகன சோதனை 

இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை காந்திசிலை பஸ் நிறுத்தம் பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 

அந்த காரில் இருந்த நபர் மருத்துவ தேவைக்காக கூறி ஏமாற்றி அடிக்கடி செல்வதாக கூறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர். 

உறுதிமொழி எடுக்க வைத்தனர் 

மேலும் தேவையில்லாமல் சாலையில் சுற்றிய 25-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் பிடித்து ஒரு இடத்தில் நிறுத்தி வைத்தனர். 

பின்னர் அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி யதுடன், இனிமேல் தேவையில்லாமல் வெளியே வர மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர். 

பின்னர் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் கூறும்போது, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கிறது. 

எனவே பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்த்து, கொரோனா பரவுவதை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர். 


Next Story