நிவாரணம் வழங்ககோரி டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை ஊழியர் கொரோனாவால் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்ககோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நொய்யல்
கொரோனாவால் சாவு
அரியலூரை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் கரூர் மாவட்டம் புகளூர் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலையில் சென்ரல் கண்ட்ரோல் அறையில் நிரந்தர பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி அவர் தனது சொந்த ஊரான அரியலூருக்கு சென்றார். அவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு சளி, இருமல் காய்ச்சல் வந்தது. இதனால் அவதிப்பட்ட அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 13-ந்தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த புகளூர் காகித ஆலை மற்றும் சிமெண்டு ஆலை தொழிலாளர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து காகித ஆலை மற்றும் சிமெண்டு ஆலைக்கு பணிக்கு வந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வெளியே வந்து காகித ஆலையின் 2-வது கேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கொரோனாவால் இறந்த அரியலூரை சேர்ந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காகித ஆலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜீவானந்தம் உள்பட 100 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story