ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுழற்சி முறையில் 4 மருத்துவக்குழுவினர் கொரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் 4 மருத்துவக்குழுவினர் கொரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுழற்சி முறையில் 4 மருத்துவக்குழுவினர் கொரோனா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது படிப்படியாக தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரத்தில் ஆயிரம் தடுப்பூசிகளும், பரமக்குடியில் 3 ஆயிரத்து 800 தடுப்பூசிகளும் கையிருப்பு உள்ளது. இந்த தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் விரைவில் வரவுள்ளன. இந்த ஊசிகள் வந்ததும் படிப்படியாக போடப்பட உள்ளன.
மருத்துவ குழுவினர்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 6 மணி நேரத்திற்கு ஒரு மருத்துவ குழு என மொத்தம் 4 மருத்துவ குழுவினர் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு கொரோனா நோயாளிகளையும் 4 முறை டாக்டர்கள் தினமும் கவனித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இதன் மூலம் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவி கூடுதலாக கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
அறிக்கை
இதுதவிர மேலும் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதால் வரும் காலங்களில் அதிக அளவு தொற்று ஏற்பட்டாலும் அரசு ஆஸ்பத்திரிகளில் தொய்வின்றி சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயாராக உள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொற்று நோயாளிகள் நிலவரங்களை மருத்துவ குழுவினர் தினமும் அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தேவைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் கலெக்டர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் இங்கிருந்தே நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story