திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 744 பேருக்கு சிகிச்சை: ஒரே மாதத்தில் 9 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு உயிரிழந்த சோகம்
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 744 கர்ப்பிணிகளில் ஒரே மாதத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது.
திருச்சி,
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 744 கர்ப்பிணிகளில் ஒரே மாதத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது.
திருச்சியில் புதிய உச்சம்
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று புதிய உச்சம் பெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு கொரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த மே 31-ந் தேதிவரை 581 பேர் கொரோனா தொற்றுக்கு திருச்சி மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளும் பாதிப்பு
கொரோனா தொற்று பரவல் என்பது முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கர்ப்பிணிகளையும் விட்டு வைக்கவில்லை. எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் கண்ணுக்கு தெரியாமல் மனித உடலை கொரோனா ஆட்கொண்டு விடுகிறது.
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் டிசம்பர் இறுதிவரையிலான கொரோனா முதல் அலையில் திருச்சி மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் கொரானாவுக்கு 2 கர்ப்பிணிகள் மட்டுமே உயிரிழந்தனர்.
9 கர்ப்பிணிகள் உயிரிழப்பு
திருச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 744 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கொரோனாவுக்கு கர்ப்பிணிகள் யாரும் உயிரிழக்க வில்லை.
கொரோனா பாதித்த 94 கர்ப்பிணிகள் முறையான சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக குழந்தைகளை பெற்றெடுத்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதே வேளையில் கடந்த மே மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு 9 கர்ப்பிணிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிசுவுடன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறப்பு அதிகம்
கொரோனா 2-வது அலையில் பாதிப்பும் அதிகம், இறப்பும் அதிகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், கொரோனா பாதித்தால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் உள்ளன.
பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு துறைத்தலைவர் டாக்டர் உமா கூறியதாவது:-
உடல் பருமன், சர்க்கரை நோய்
கொரோனா வைரஸ் வீரியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால், தொற்று பரவலும், இறப்பும் அதிகரித்துள்ளது. அதில் கொரோனா 2-வது அலையானது கர்ப்பிணிகளையும் சற்று அதிகமாகவே பாதித்திருக்கிறது. கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் பலர், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு பிரிவில் உள்ள 100 படுக்கைகளும் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளால் நிரம்பி இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 9 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இணை நோய்களான சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story