திருச்சி மாவட்டத்திற்கு 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன


திருச்சி மாவட்டத்திற்கு 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன
x
தினத்தந்தி 3 Jun 2021 1:52 AM IST (Updated: 3 Jun 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்திற்கு 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வந்தன.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்திற்கு 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வந்தன. அவை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து நிரந்தர முகாமில் செலுத்தப்படுகிறது.

சிறப்பு முகாம்கள் ரத்து

திருச்சி மாநகரில் தேவர் ஹால், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் மற்றும் அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் அமைத்து செலுத்தப்பட்டு வந்தன.

கொரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது. அதே வேளையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிலர் பரிந்துரையின் பேரில் மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் செலுத்தப்பட்டது.

18 ஆயிரம் டோஸ் வந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு, தமிழக அரசுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களும் ஒதுக்கியது. அவற்றில் திருச்சி மாவட்டத்திற்கு 15 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, 3 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களும் ஒதுக்கப்பட்டு நேற்று வந்தன. அத்தடுப்பூசிகளை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் நிரந்தர முகாம்களில் வழங்க அறிவுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் கூறியதாவது:-

25 இடங்களில்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 அரசு ஆஸ்பத்திரி, 14 ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 25 நிரந்தர இடங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி டோஸ் குறைவாக இருப்பதால் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட் டுள்ளது. அது குறித்த முறையான அறிவிப்பு வந்ததும் அவர்களுக்கும் போடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story