பக்தர்களின் மனம் புண்படாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும்


பக்தர்களின் மனம் புண்படாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும்
x
தினத்தந்தி 3 Jun 2021 2:06 AM IST (Updated: 3 Jun 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் மனம் புண்படாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் நடத்தி விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

மணவாளக்குறிச்சி: 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் மனம் புண்படாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் நடத்தி விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் பேட்டி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவிலுக்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்களை அங்கிருந்த கோவில் நிர்வாகிகள், அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-  
கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து துரதிஷ்டவசமானது. விபத்தில் கோவிலின் மேற் கூரைகள் மற்றும் சில பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுபற்றி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
மறு சீரமைப்பு பணிகள்
 தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு ெசல்லப்பட்டுள்ளது. எனவே கோவிலில் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட பட்டுள்ளது. முன்னதாக கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் பக்தர்கள் மனம் புண்படாதவாறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது அலட்சிய செயல்பாடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கலெக்டர், அரசியல்  பிரமுகர்கள்
முன்னதாக தீ விபத்து ஏற்பட்ட கோவிலுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், எம்.ஆர்.காந்தி, தளவாய் சுந்தரம், விஜயதரணி, முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், பச்சைமால், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் பாண்டியம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் கலாராணி, திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் ரத்னவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர்கள் அய்யப்பன், ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன்,  மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், துணைத்தலைவர் சிவகுமார்,  இந்து முன்னணி கோட்ட தலைவர் மிசா சோமன், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆவின் தலைவர் அசோகன் உள்பட பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு  சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 
பிரசன்னம் பார்க்க வேண்டும்
விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியையும், ஒருவிதமான அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். இந்த கோவில் கேரள ஆகம விதிப்படி உள்ளதால் கேரள தந்திரிகளை வரவழைத்து பிரசன்னம் பார்க்க வேண்டும். கலச பூஜை நடத்த வேண்டும். சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். தீ விபத்துக்கு அதிகாரிகள் அல்லது கோவில் ஊழியர்கள் யாரேனும் காரணமாக இருந்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.  

Next Story