சுரண்டை அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


சுரண்டை அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Jun 2021 3:17 AM IST (Updated: 3 Jun 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை தேரடி தெருவில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி இசக்கி கதவை அடைத்து விட்டு சென்றார். நேற்று காலையில் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவிலின் முன்பகுதியிலும், உள்ளேயும் உள்ள 2 உண்டில்களும் உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போய் இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் உடனடியாக கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். பின்னர் சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டில்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாம்பவர்வடகரையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு மாஞ்சோலை தெருவில் உள்ள பெயிண்டர் சரவணன் வீட்டில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பெயிண்டு டப்பாக்கள் மற்றும் பெயிண்டு அடிக்கும் கருவிகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். இதேபோல் சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த 8 உப்பு மூட்டைகளை மர்மநபர்கள் திருடி உள்ளனர். இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story