கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 252 மண்டல குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு கலெக்டர் கார்மேகம் தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 252 மண்டல குழுக்கள் அமைத்து  தீவிர கண்காணிப்பு கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2021 4:20 AM IST (Updated: 3 Jun 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருவதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 252 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருவதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகும் நபர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்த்து கண்காணித்தல், முழு ஊரடங்கினை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
252 மண்டல குழுக்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுத்திடவும், ஊரடங்கினை கண்காணித்திடவும், கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனியாக உள்ளார்களா? என்பதை கண்காணிக்கவும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலனை கண்காணித்திடவும் 69 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில் 252 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுப்பட்டுள்ளது.
இந்த மண்டல குழுக்கள் கொரோனா நோயாளிகளின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்தல், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், கட்டுப்பாட்டு பகுதிகளை ஆய்வு செய்து உரிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், முழு ஊரடங்கை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களப்பணியாளர்கள்
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுத்திட 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட்டு, தினமும் வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) லதா, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story