ஊட்டியில் குதிரைகள், தெருநாய்களுக்கு உணவு
ஊட்டியில் குதிரைகள், தெரு நாய்களுக்கு உணவுகளை வழங்க கால்நடை பராமரிப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் குதிரைகள், தெரு நாய்களுக்கு உணவுகளை வழங்க கால்நடை பராமரிப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.
குதிரைகள், நாய்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் குதிரைகள் போன்ற கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.
வழக்கமாக கடைகள் திறந்து இருக்கும் போது மீதியாகும் உணவு பொருட்கள் வெளியே கொட்டப்படும். இதனை தெருநாய்கள் சாப்பிடும். ஆனால், முழு ஊரடங்கால் இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் உள்ளது. இதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காமல் பசியுடன் சுற்றித்திரிந்து வருகின்றன.
உணவு வழங்க ஏற்பாடு
இதையடுத்து கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில், சாலைகளில் உலா வரும் குதிரைகள் மற்றும் தெரு நாய்களுக்கு தினமும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூரில் தெரு நாய்களுக்கு மாவட்ட விலங்குகள் நல அமைப்பு மூலம் வாகனங்களில் நேரடியாகக் கொண்டு சென்று உணவு வழங்கப்படுகிறது.
அதேபோல் குதிரைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களிடம் கோதுமை தவிடு மூட்டைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.2 லட்சம் நிதி
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் கூறும்போது, ஊட்டி, குன்னூரில் தினமும் 100 தெரு நாய்களுக்கு 20 கிலோ உணவு வழங்கப்படுகிறது. கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றுடன் உணவு வைக்கப்படுகிறது.
தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் தெரு நாய்கள் பசியாறி வருகின்றன. கடந்த மே மாதம் 72 குதிரை உரிமையாளர்களின் 118 குதிரைகளை முழு ஊரடங்கில் சரியாக பராமரிக்கும் வகையில் கோதுமை தவிடு 90 மூட்டைகள் என 3 ஆயிரத்து 60 கிலோ வழங்கப்பட்டு உள்ளது. குதிரைகளுக்கு உணவு அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார் என்றார்.
Related Tags :
Next Story