வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை


வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2021 10:15 AM IST (Updated: 3 Jun 2021 10:15 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை

பூந்தமல்லி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு வேண்டிய மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடு, வீடாக சென்று பொருட்கள் விற்பனை செய்யும் புதிய வியாபாரிகள், அதிக லாப நோக்கில்லாமல் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும். மீறினால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும்.

சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கட்டுப்பட்டில் செயல்படும் கடைகளில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே வியாபாரிகள் வாங்கியுள்ள கடனுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து 6 மாத காலம் அவகாசம் தர வேண்டும். இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story