கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு சமூக இடைவெளியின்றி தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 7 பஸ்களுக்கு அபராதம்


கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு சமூக இடைவெளியின்றி தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 7 பஸ்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:49 AM IST (Updated: 3 Jun 2021 1:13 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு சமூக இடைவெளியின்றி தொழிலாளர்களை ஏற்றி சென்ற 7 பஸ்களுக்கு வருவாய் துறையினர் அபராதம் விதித்தனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தில் மத்திய அரசு நிறுவனங்களான சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல பிரிவுகள் அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த பிரிவுகள் உள்ள வளாகத்தில் கட்டுமானப்பணி உள்பட பல பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பணிகளுக்கு கல்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், வெங்கம்பாக்கம், போன்ற பல கிராமங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் ஒப்பந்த பஸ்கள் மூலமாக அணுமின்நிலைய வளாகத்திற்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் அப்பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று முன்தினம் இந்த பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தொழிலாளிகள் அழைத்து வரப்படுவதாக திருக்கழுக்குன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் நரேஷ்குமார், ராஜேஷ், ஜெயஸ் குமார், அசோக் ஆகியோர் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கூட்ரோடு சந்திப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் விதிகளை மீறி தொழிலாளர்களை ஏற்றி அந்த வழியாக வந்த 7 ஒப்பந்த பஸ்களுக்கும் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

Next Story