மண் பரிசோதனை மூலம் உரச்செலவை குறைக்கலாம். இணை இயக்குனர் தகவல்
மண் பரிசோதனை செய்வதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மண் மாதிரி
மண் வளத்தினை பாதுகாக்க மண் பரிசோதனை மிகவும் முக்கியமானதாகும். மண் பரிசோதனை செய்வதால் மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்து கொள்ளலாம். மேலும் மண்ணில் உள்ள அமிலம், சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளலாம். ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையை காட்டும் வகையில் இருக்க வேண்டும். ஆகையால் ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
மேட்டுப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதிக்கு தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.வரப்பு, வாய்க்கால் அருகிலும், மரத்தடி, கிணற்றுக்கு அருகிலும், மக்கிய குப்பை உரங்கள் மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
அதிக மகசூல்
நெல், கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு மேலிருந்து 15 சென்டி மீட்டர் ஆழத்திலும் பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு மேலிருந்து 22 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்தும் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகள் மற்றும் பைகளை மாதிரிக்கு அனுப்பபயன்படுத்தக்கூடாது.
விவசாயிகள் நேரடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மூலமாக ஒரு மண் மாதிரிக்கு ரூ.20 கட்டணமாக செலுத்தி மண்வள அட்டை பெற்று அதன் பரிந்துரையின் பேரில் பயிர்களின் தேவைக்கேற்ப உரமிட்டு, உரச் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story